உடுமலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
உடுமலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
காண்டூர் கால்வாய் புனரமைப்பு
கோவை மாவட்டம் சர்க்கார்பதியிலிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு செல்லும் காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசும், கேரள அரசும் இணைந்து 1958-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம் மலைப்பகுதிகளை குடைந்து சர்க்கார்பதிக்கு நீரை கொண்டு வந்து அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு ஆழியார் அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் நீரை எடுத்துச் செல்லக்கூடிய பிரதான வாய்க்காலான காண்டூர் கால்வாய் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு மலைப்பகுதியை ஒட்டியும், மலையை குடைந்தும் அமைக்கப்பட்டுள்ளது.
தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை
ஆழியார் அணை, திருமூர்த்தி அணை ஆகிய இரு அணைகள் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவுப்படி, கடந்த 2009-ம் ஆண்டு ரூ.185 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர் கசிவு முற்றிலும் தடுக்க பட்டது. ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் சர்க்கார்பதியில் இருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மீதம் உள்ளது. சரிவர பராமரிப்பு செய்யப்படாத காரணத்தாலும், மலைப்பகுதிகளுக்கு அருகில் இருப்பதாலும் பக்கவாட்டுச் சுவரில் மரங்கள் வளர்ந்து இருப்பதாலும் பக்கவாட்டு சுவர் பழுதடைந்துள்ளது. இதுபோன்ற மரங்கள் விழுவதாலும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடை ஏற்படுகிறது. காண்டூர் கால்வாய் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிக்கப்பட்டு பாசனத்திற்கு எந்தவித தடையுமின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம்
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆழியாறு பகுதியில் வி.கே.பழனிசாமி கவுண்டர் மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், ஆழியாறு அணை பகுதியையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் விவேகானந்தன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) அரங்கநாதன், உதவி பொறியாளர் லீலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story