வீட்டின் கதவை உடைத்து பெண்ணிடம் நகை பறிப்பு
தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பெண்ணிடம் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பெண்ணிடம் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கதவை உடைத்த மர்மநபர்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர்நகரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 60). இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் முடிந்த இவர்களுடைய மூத்த மகள் ஜெபசெல்வி (29) மற்றும் இளைய மகள் ஜெபகிறிஸ்டி (27) ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வநாயகம் இரவு வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தாய் மற்றும் 2 மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.
நகை பறிப்பு
அங்கு ஜெபகிறிஸ்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றபோது சுதாரித்த அவர், அந்த நபரிடம் இருந்து சங்கிலியை பிடுங்கியுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் கூச்சல் போடவும் மர்மநபர் அங்கிருந்து தப்பிசென்றார்.
அப்போது மூத்த மகளான ஜெபசெல்வியின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை ஏற்கனவே மர்மநபர் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகியிருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
நள்ளிரவில் கதவை உடைத்து வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story