ஊட்டியில் பலத்த காற்றால் பூண்டு செடிகள் சேதம்


ஊட்டியில் பலத்த காற்றால் பூண்டு செடிகள் சேதம்
x

ஊட்டியில் பலத்த காற்று காரணமாக பூண்டு செடிகள் சாய்ந்து சேதமடைந்தன.

ஊட்டி

ஊட்டியில் பலத்த காற்று காரணமாக பூண்டு செடிகள் சாய்ந்து சேதமடைந்தன.

பூண்டு செடிகள் சேதம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி பூண்டுக்கு என தனி மவுசு உள்ளது. மருத்துவ குணம் உடையது என்பதால், இங்கு அறுவடை செய்யப்படும் பூண்டுகளை விதைக்காக வடமாநிலங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர்.

இதற்கிடையே ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பூண்டு செடிகள் கீழே சாய்ந்து வருகின்றன. 

ஊட்டி மஞ்சனக்கொரை, முத்தோரை பாலடா, நஞ்சநாடு, அணிக்கொரை, தேனாடுகம்பை, ஆடாசோலை உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பூண்டு செடிகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

விவசாயிகள் கவலை

சில விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த காற்றால் சாயாமல் இருக்க செடிகளை கம்பு வைத்து சுற்றிலும் கட்டி வைத்து உள்ளனர். இதனால் அந்த செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட வில்லை. சாய்ந்த செடிகள் மீண்டும் நன்றாக வளர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பூண்டு விளைச்சல் போதிய அளவு இருக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பூண்டு செடிகள் சாய்ந்து சேதடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மண் சரிவு

பந்தலூர் தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மரங்கள் காற்றில் முறிந்து விழுவதால், மின்கம்பிகள் அறுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

 இந்த நிலையில் அய்யன்கொல்லி அருகே குழிகடவு பகுதியில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் என்பவரின் அருகே ஏற்பட்ட மண்சரிவால் அவரது வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மழை அளவு

ஊட்டி நகரில் நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை. இருப்பினும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

 நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- 
ஊட்டி-4.4, நடுவட்டம்-22, கிளன்மார்கன்-27, அவலாஞ்சி-20, அப்பர்பவானி-14, கூடலூர்-11, தேவாலா-12, பந்தலூர்-22, சேரங்கோடு-12, செருமுள்ளி-12.

Next Story