ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு


ஹெல்மெட் அணிவது குறித்து போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 July 2021 11:03 PM IST (Updated: 17 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டி

ஹெல்மெட் அணிவது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின் படி இருசக்கர வாகனங்களில் முன்னால் அமர்ந்து ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி கமர்சியல் சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமை தாங்கி ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

விழிப்புணர்வு

அப்போது இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார். இதேபோல சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை ஆகிய 2 இடங்களில் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதில் 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மலைப்பாதைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மேல்நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

போலீசார் ரோந்து

முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். ஊரடங்கு தளர்வு காரணமாக வெளியிடங்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள், உள்ளூர் மக்கள் வாகனங்களை சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை ஒழுங்குபடுத்த போலீசார் ரோந்து சென்று சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

Next Story