மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில் விட முடிவு


மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில் விட முடிவு
x
தினத்தந்தி 17 July 2021 11:03 PM IST (Updated: 17 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிவால்டோ’ யானையை வனத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கூடலூர்

மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிவால்டோ’ யானையை வனத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

‘ரிவால்டோ’ யானை

கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக  காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு வந்தது. இந்த யானையை அந்த பகுதி மக்கள் ‘ரிவால்டோ’ என்று பெயர் வைத்து அழைத்து வந்தனர். மேலும் யானைக்கு சுவாச பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டது. 

இந்த நிலையில் மற்றொரு காட்டு யானையின் உடலில் ஒரு கும்பல் தீப்பந்தம் வீசிய சம்பவம் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி ரிவால்டோ காட்டு யானையை பிடித்து முதுமலையில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதன்படி கடந்த மே மாதம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து ரிவால்டோ காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து அடைத்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் வனத்துறையினர் பசுந்தீவனங்களை அளித்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் மரக் கூண்டில் ரிவால்டோ காட்டு யானை அடைத்தது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

 இதனால் காட்டு யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிப்பது அல்லது வனத்தில் விடுவது குறித்து கால்நடை டாக்டர்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் கொண்ட கமிட்டியினர் கடந்த வாரம் மசினகுடி பகுதியில் ஆய்வு நடத்தினர்.

வனத்தில் விட முடிவு

இக்கமிட்டி முதன்மை தலைமை வன அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் ரிவால்டோ காட்டு யானையை வனத்தில் விட வன உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 இதற்கான உத்தரவு ஆணை முதுமலை புலிகள் காப்பக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி ரிவால்டோ காட்டு யானையை வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் (வெளிமண்டலம்) ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

ரிவால்டோ காட்டு யானையை வனத்தில் விட தலைமை வார்டனிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால் மரக் கூண்டிலிருந்து காட்டு யானையை விடுவித்து வாகனம் மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் வனப்பகுதியில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்காக குறிப்பிட்ட பகுதி சூரிய மின்வேலி அமைக்கப்படவுள்ளது. மேலும் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். தொடர்ந்து குறிப்பிட்ட வனத்தில் நின்று பழகியதும் அடர்ந்த வனத்துக்குள் யானை விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story