எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நீச்சல் அடிக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நீச்சலடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்:
தேங்கும் தண்ணீர்
எலச்சிபாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இருபுறமும் சாலை விரிவாக்கபணிகள் முடிந்த பிறகு சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் விரிவாக்க பணி காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாலையின் உயரம் உயர்ந்து விட்டதால் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் அந்த பகுதியில் தொடர்ந்து தேங்கி நின்றது. இதனால் அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். எனவே இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதை சரிசெய்திட வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது எலச்சிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மழைபெய்ததால், அந்த இடத்தில் ஏற்கனவே தேங்கி நின்ற கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து குட்டை போல் காட்சி அளித்தது.
நீச்சல் அடிக்கும் போராட்டம்
இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் விபத்து அபாயம் உள்ளதால் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய வலியுறுத்தி நேற்று மாலை அந்த இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் வந்தனர். அங்கு கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ரமேஷ், கூட்டுறவு சங்க இயக்குனர் மாரிமுத்து, ரவி ஆகியோர் தேங்கி நின்ற தண்ணீரில் படுத்து திடீரென நீச்சல் அடிக்கும் போராட்டம் நடத்தினர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story