ஆடிமாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகள் உற்சாகம்


ஆடிமாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 17 July 2021 11:34 PM IST (Updated: 17 July 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிமாத பிறப்பையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகையை சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

நாமக்கல்:

தேங்காய் சுடும் பண்டிகை
ஆடிமாத பிறப்பையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி, பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாலை பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும், புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு, இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒருகண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர்.
இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காய் உடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் தலையாடி பண்டிகையை கொண்டாடினர். தலையாடியை யொட்டி தேங்காய் சுடும் பண்டிகை நாமக்கல் நகரில் நேற்று தில்லைபுரம் உள்பட ஆங்காங்கே தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பகுதியில், ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர். பின்னர் மாலை பொதுமக்களும், குழந்தைகளும், புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபடுவது வழக்கம். அதே போல் இந்த நேற்று அதிகாலை புதுமண தம்பதிகளும், பொதுமக்களும் காவிரியில் நீராடி வழிபட்டனர். 
மாலை புதுமண தம்பதியினர், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு ஆகிய பொருட்களை இளம் தேங்காயில் அடைத்து அழிஞ்சி மரக்குச்சியில் இணைத்து ஒன்று கூடி தீயில் சுட்டு மகிழ்ந்தனர். தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள் முன்பு படைத்து வழிபட்டு அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து தலையாடி எனப்படும் தேங்காய் சுடும் பண்டிகையை கொண்டாடினர்.

Next Story