பூவரசகுடி மகளிர் சுய உதவி குழு ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது


பூவரசகுடி  மகளிர் சுய உதவி குழு ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடத்தில் தீ விபத்து  பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது
x
தினத்தந்தி 17 July 2021 11:35 PM IST (Updated: 17 July 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

பூவரசகுடி மகளிர் சுய உதவி குழு ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடத்தில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசமானது.

திருவரங்குளம்:
ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள பூவரசகுடி கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் ஒரு கட்டிடத்தில் பூவை கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் ஆயத்த ஆடை தயாரித்து வருகின்றனர். மேலும் அங்கு கைவினை பொருட்கள் தயாரித்தல், பெண்களுக்குரிய துணிகள் தைத்தல் மற்றும் தேசியக்கொடிகளை தைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கட்டிடத்திற்கு அருகில் வசிப்பவர் கருப்பையா மகன் பழனிச்சாமி (வயது 38) என்பவர் நேற்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் தீ மள மளவென எரிந்த நிலையில், அந்த நபர் லேசான தீக்காயங்களுடன் கட்டிடத்தின் ஜன்னலை பெயர்த்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அங்கிருந்து சென்று விட்டார். 
பொருட்கள் நாசம்
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுவினர் வல்லத்திராகோட்டை போலீசாருக்கும், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 
இருப்பினும் அங்கு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடைகள், கைவினை பொருட்கள், தையல் எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story