நாமக்கல்லில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல்லில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 11:38 PM IST (Updated: 17 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவருக்கு இடையே இடைவெளி விட வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல்:

சாலை மறியல்
நாமக்கல்-திருச்சி சாலை, நளா ஓட்டல் முதல் வேப்பனம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சாலையின் நடுவே சிமெண்டால் ஆன தடுப்புசுவர் (டிவைடர்) அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நாகராஜபுரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள தில்லைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல தடுப்புசுவருக்கு இடையே வாகனங்களில் சென்று வரும் வகையில் இடைவெளி விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அந்த கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தடுப்புசுவரில் இடைவெளி விட வலியுறுத்தி நேற்று மாலை அந்த பகுதி பொதுமக்கள் திடீரென நாமக்கல்-திருச்சி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி இடைவெளி விடுவதற்கு எற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
தில்லைநகர் பகுதியில் சுமார் 400 குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலையில் தடுப்புசுவர் அமைக்கப்பட்டால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நாங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கிக்கு தினசரி 500 பேர் வந்து செல்கிறார்கள். அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே தடுப்புசுவருக்கு இடையே சாலையை கடந்து செல்லும் வகையில் இடைவெளி விட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் நேற்று அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story