கடலூரில் குடும்பத்துடன் மீனவர்கள் உண்ணாவிரதம்


கடலூரில் குடும்பத்துடன் மீனவர்கள்  உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 July 2021 12:37 AM IST (Updated: 18 July 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடலூர் சில்வர் பீச்சில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.

கடலூர், 

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் சுருக்குமடி வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே தேவனாம்பட்டினம் மீனவர்கள் 17-ந் தேதி (அதாவது நேற்று) கடலூர் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்தையும், புதுச்சேரி மாநிலத்தையும் சேர்ந்த மீனவர்களை திரட்டி கடலூர் சில்வர் பீச்சில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக கடலூர் சில்வர் பீச்சில் குவிக்கப்பட்டனர். 
மேலும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல் படை போலீசார் 2 ரோந்து படகுகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 ஆம்புலன்சும், ஒரு தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் காலை 9 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் சில்வர் பீச்சுக்கு திரண்டு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, நல்லவாடு உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 கிராம மீனவர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் அனுமந்தை, கூனிமேடு, எக்கியார்குப்பம், மரக்காணம் உள்ளிட்ட 19 கிராம மீனவர்களும், புதுச்சேரி மாநிலத்தில் கீரப்பாளையம், பனித்திட்டு, மூர்த்திக்குப்பம் உள்ளிட்ட 14 கிராம மீனவர்களும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்து வந்து தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

உரிய தீர்வு

அப்போது மீனவர்கள் கூறுகையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். இதில் நாங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளோம். இதனால் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி இன்று (அதாவது நேற்று) கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் தங்கள் படகுகளை கடலூர் துறைமுகத்திலும், தேவனாம்பட்டினம் கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

1,100 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 1,100 மீனவர்கள் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story