ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே ரூ.50 லட்சம் கேட்டு ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் காளிமுத்து (வயது 45). இவரிடம், கருப்பேரி கிராமத்தை சேர்ந்த ராம்குமார்(34) என்பவர் ரூ.30 ஆயிரத்தை கடந்த 2 ஆண்டகளுக்கு முன்பு கடன் வாங்கினார்.
இந்த பணத்தை கடந்த 15-ந்தேதி திருப்பி தருவதாக கூறி, காளிமுத்துவை ஒரு காரில் அழைத்து சென்றார். அப்போது காரில் ராம்குமாருடன் வந்த நண்பர்கள் காளிமுத்துவை கத்தியால் தாக்கி, ரூ.50 லட்சம் தர வேண்டும் அப்போது தான் விடுவிப்பதாக தெரிவித்தனர்.
இதில் ரூ.5 லட்சம் பணத்தை மறுநாள்(அதாவது 16-ந்தேதி) த ருகிறேன் என்று கூறினார். இதையடுத்து காளிமுத்துவிடம் இருந்த ரூ.1 லட்சத்தை மட்டும் பறித்துக்கொண்டு கடலூர் அருகே ஒரு பகுதியில் இறக்கி விட்டுசென்றுவிட்டனர்.
2 பேர் கைது
அங்கிருந்து பஸ்சில் காட்டுமன்னார்கோவில் வந்த காளிமுத்து, தன்னை காரில் கடத்தி சென்றவர்கள் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமுதா வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று, ராம்குமார், அவரது நண்பரான நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டை சேர்ந்த அஜித் குமார் (வயது 21) ஆகியோரை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவரான நீலகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story