தஞ்சை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் புகார்
தஞ்சை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் புகார் கூறினர்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் புகார் கூறினர்.
செயற்குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன், பொருளாளர் தேசிங்குராஜா, துணைத்தலைவர் செல்வேந்திரன், முன்னாள் தலைவர் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 20 ஆயிரத்து 265 வீடுகள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பயனாளிகளின் ஏழ்மை நிலை, விருப்பமின்மை, வீடு கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட இடர்பாடுகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பயனாளிகளுக்கு தவணை நிதிகளை விடுவிக்க சொல்லி உயர் அலுவலர்கள் கொடுத்த நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளில் 30 சதவீதம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் தேக்க நிலையில் உள்ளன.
முறைகேடு
இந்த தேக்க நிலையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளின் உண்மை நிலையை உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர்கள் நிலை அலுவலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து, பணி முடிக்கப்படாத அனைத்து வீடுகளுக்கும் கூடுதல் நிதி ரூ.70 ஆயிரம் வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
2020 -21 ஆம் ஆண்டுக்கான ஜல் ஜீவன் திட்டத்தில் (அனைத்து வீடுகளுக்குமான குடிநீர் திட்டம்) பணிகளை தேர்வு செய்தது, திட்ட மதிப்பீடுகள் தயாரித்தது, பணிகளை தொகுப்புகளாக பிரித்தது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும், எந்த நிலையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கலந்தாலோசிக்கவில்லை. இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாக, திரைமறைவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகைமையில் நடைபெற்றன. தமிழ்நாடு வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
நிறுத்தி வைக்க வேண்டும்
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் குடிநீர் திட்ட பணிகளில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யப்பட வேண்டிய 10 சதவீத பங்குத்தொகையை வசூல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story