மாமியாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த மருமகன்


மாமியாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த மருமகன்
x
தினத்தந்தி 18 July 2021 1:44 AM IST (Updated: 18 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே குடிக்க பணம் தர மறுத்ததால் மாமியாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த மருமகன், நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஜெகநாதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வடிவம்மாள் (வயது 63). இவருக்கு திருமலைநம்பி (30) என்ற மகனும், பரமேஸ்வரி உள்பட 2 மகள்களும் உள்ளனர். 

திருமலைநம்பி தனது மனைவி, குழந்தைகளுடன் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். பரமேஸ்வரியை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த கல்லத்தியான் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மற்றொரு மகளை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே கணவர் இறந்து விட்டதால் வடிவம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மேலும், வடிவம்மாள் உள்ளூரில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் வேலை செய்து வந்தார். கடந்த 12-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். மறுநாள் காலையில் அவரது வீட்டின் கதவு வெகுநேரம் ஆகியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். உள்ளே வடிவம்மாள் படுக்கையில் இறந்து கிடந்தார். 

இதுகுறித்து உடனடியாக வடிவம்மாளின் மகன் திருமலைநம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாயார் இயற்கையாக இறந்து விட்டதாக நினைத்து அவருக்கு இறுதிச்சடங்கை திருமலைநம்பி மற்றும் குடும்பத்தினர் செய்தனர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி தனது தாயாரின் வீட்டில்    இருந்த   பீரோவை திருமலைநம்பி திறந்து பார்த்தார். அதில் வடிவம்மாளின் நகைகள் அனைத்தும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, கடந்த 12-ந் தேதி மருமகன் கல்லத்தியான் வந்து சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து தனது தாயார் சாவில் சந்தேகம் இருப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் திருமலைநம்பி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், வடிவம்மாள் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, கல்லத்தியான் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கல்லத்தியானுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் செலவுக்காக மாமியார் வடிவம்மாளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வாங்கிச் செல்வார். இதுபோல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் வடிவம்மாள் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லத்தியான் தனது மாமியாரை கொன்று, அவரது நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர்களான இசக்கிராஜா (26), மூர்த்தி (29), அந்தோணி (32) ஆகியோரும் செயல்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 12-ந் தேதி மாலையில் கல்லத்தியான் உள்பட 4 பேரும் வடிவம்மாள் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் 4 பேரும் வெளியே சென்றுவிட்டனர். இரவில் வடிவம்மாள் தூங்கியதும் 4 பேரும் வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு தூங்கிக்கொண்டு இருந்த வடிவம்மாளை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

மேலும், கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் கல்லத்தியான் நாடகமாடி தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நகைக்காக மாமியாரை கொன்று நாடகமாடிய கல்லத்தியான் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்களான இசக்கிராஜா, மூர்த்தி, அந்தோணி ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ெகாள்ளையடிக்கப்பட்ட 10 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். 

நெல்லை அருகே பெண்ணை கொன்று 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய மருமகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story