கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம் - தேர்வு மையங்களில் மந்திரி திடீர் ஆய்வு


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம் - தேர்வு மையங்களில் மந்திரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 July 2021 2:23 AM IST (Updated: 18 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 8¾ லடசம் மாணவ, மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் மந்திரி சுரேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

பெங்களூரு:
 
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் கொரோனா காரணமாக பி.யூ.சி. 2-வது ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்பட்டே தீரும் என்று பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

  ஆனாலும் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும் என்று அரசும் உறுதியாக அறிவித்தது. அதன்படி, கர்நாடகத்தில் வருகிற 19-ந் தேதி (அதாவது நாளை) மற்றும் 22-ந் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைெபற உள்ளது. வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 6 நாட்கள் நடைபெறும். மொழி பாடங்கள் தனித்தனியாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தப்படும்.

நாளை தோ்வு தொடக்கம்

  தற்போது கொரோனா பரவல் காரணமாகவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காகவும் 2 நாட்கள் மட்டுமே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற இருக்கிறது. அதாவது மொழி பாடங்கள் ஒரே தேர்வாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரே தேர்வாகவும் என நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 22-ந் தேதி இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி, கல்வித்துறை செய்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பொதுநல மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

  இதனால் கர்நாடகத்தில் நாளை திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரை தேர்வு நடக்கிறது. நாளை கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வும், வருகிற 22-ந் தேதி கன்னடம், ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 76 ஆயிரத்து 581 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக ஒரு வகுப்பறையில் 12 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

முகக்கவசம் அணிவது கட்டாயம்

  தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும், அவர்களது கைகளில் கிருமி நாசினி தெளித்தும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறியான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அந்த மாணவ, மாணவிகள் தனியாக அமர வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

  மேலும் கொரோனா பாதித்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு சென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் வந்து தேர்வு எழுத வேண்டியதில்லை. தற்போது அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்தே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வு மையங்களில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒரு முறையாவது கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மந்திரி ஆய்வு

  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வவை பாதுகாப்புடன் நடத்துவதற்காக ஒவ்வொரு தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யவும் கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் மையங்களை செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மந்திரி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ஆகஸ்டு முதல் வாரத்தில்...

  பின்னர் மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 66 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. கொரோனா காரணமாக மாணவ, மாணவிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  ஆசிரியர்கள், ஊழியர்கள் என 1 லட்சத்து 19 ஆயிரத்து 469 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுத்தாள்களை திருத்துவதில் தாமதம் ஆகாது என்பதால், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், " என்றார்.

Next Story