குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை; மருமகன் கைது


குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை; மருமகன் கைது
x
தினத்தந்தி 18 July 2021 2:33 AM IST (Updated: 18 July 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டியில் குடும்ப தகராறில் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 50). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, மூலைக்கரைப்பட்டி கல்லத்தியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜலட்சுமிக்கும், அவருடைய மருமகன் அபிமன்யுவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று இரவில் அபிமன்யு தனது மாமியாரின் வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அபிமன்யு, மாமியார் என்றும் பாராமல் ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதை தடுக்க முயன்ற ஒருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த ராஜலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமன்யுவை கைது செய்தனர்.

மூலைக்கரைப்பட்டியில் குடும்ப தகராறில் மாமியாரை மருமகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story