விஷம் குடித்து தம்பதி தற்கொலை


விஷம் குடித்து தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 18 July 2021 2:47 AM IST (Updated: 18 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

அழுகிய நிலையில் உடல்கள்

  பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா விசுவேஸ்வரபுரா கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 60). இவரது மனைவி லட்சுமம்மா (55). தள்ளுவண்டியில் வைத்து முனியப்பா காய்கறி வியாபாரம் செய்து வந்தார். முனியப்பாவும், லட்சுமம்மாவும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக முனியப்பாவின் வீடு திறக்கப்படவில்லை.

  இதற்கிடையே நேற்று முன்தினம் முனியப்பாவின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் முனியப்பா வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் முனியப்பாவும், லட்சுமம்மாவும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

தற்கொலை

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நெலமங்களா டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர். பின்னர் முனியப்பா, லட்சுமம்மாவின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்து உள்ளார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்து உள்ளார்.

  ஆனாலும் அவரது மருத்துவ சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மேற்கொண்டு சிகிச்சை பெற பணம் இல்லாததால் லட்சுமம்மாவும், முனியப்பாவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story