ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கு விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் - கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வழக்கு விசாரணை அறிக்கையை, நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
6 பிரிவுகளில் வழக்கு
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானது. இந்த ஆபாச வீடியோ வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இளம்பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாகவும், கற்பழித்ததாகவும் ரமேஷ் ஜார்கிகோளி மீது 6 பிரிவுகளில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு ஆகி உள்ளது. இதுபோல ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்க முயன்றதாக இளம்பெண் மீது சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாகவும், அவர்களின் விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், ஆபாச வீடியோ வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் இளம்பெண் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோல சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டில் இளம்பெண் மனுதாக்கல் செய்து உள்ளார்.
விசாரணை அறிக்கை தாக்கல்
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஏ.எஸ்.ஓகா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை விசாரித்த நீதிபதி, சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நியாயமான முறையில் நடந்து வருவதால் இந்த வழக்கை வேறு விசாரணைக்கு அமைப்புக்கு மாற்ற முடியாது என்று கூறினார்.
2-வது மனுவை விசாரித்த நீதிபதி ஆபாச வீடியோ வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் தங்களது விசாரணை அறிக்கையை 19-ந் தேதி (நாளை) தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரபுலிங் நவதகி, ஆபாச வீடியோ வழக்கு குறித்த விசாரணை அறிக்கை 19-ந் தேதி (நாளை) சீல் வைத்த கவரில் வைத்து சமர்ப்பிக்கப்படும் என்று கோர்ட்டில் உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story