செங்கோட்டை பகுதியில் தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


செங்கோட்டை பகுதியில் தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 18 July 2021 3:15 AM IST (Updated: 18 July 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை பகுதியில் தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் தற்போது, கொரோனா 2-வது அலை காரணமாக 31-ந் தேதி வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

இதற்கிடையே, சமீபத்தில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவியை பார்த்து விட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் செங்கோட்டை அருகே குண்டாறு அணையை சுற்றி இருக்கும் தனியார் அருவிகளுக்கு சென்று குளித்து வந்தனர். 
இந்த நிலையில் இந்த அருவிகளுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின் பேரில், உதவி கலெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் செங்கோட்டை தாசில்தார் ரோசன் பேகம், வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்குள்ள தனியார் அருவிகளில் குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அங்கு இருந்து வெளியேற்றினர். மேலும் அருவிக்கு செல்லும் நுழைவு பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி சில சுற்றுலா பயணிகள் தனியார் அருவிகளில் குளித்து வருகிறார்கள். இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். எனவே கலெக்டர் உத்தரவின் பேரில், தனியார் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்றனர். 

Next Story