நங்கநல்லூர், அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையங்களில் இருந்து 12 வழித்தடங்களில் 17 மாநகர பஸ்கள் இயக்கம்
நங்கநல்லூர் மற்றும் அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையங்களில் இருந்து 12 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் 17 மாநகர பஸ்கள், சிற்றுந்துகள் இயக்கத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
12 வழித்தடங்களில் 17 பஸ்கள்
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மற்றும் அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையங்களில் இருந்து இயங்கி வந்த மாநகர பஸ்கள் சில மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், புதிய வழித்தடங்களிலும் நேற்று முதல் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.அதன்படி நங்கநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து பழைய வழித்தடங்களான நங்கநல்லூர்-பிராட்வே(தடம் எண்:52கே), நங்கநல்லூர்- கோயம்பேடு(70 என்), கீழ்கட்டளை-தியாகராயநகர்-2 பஸ்கள்(எம்.18 சி), புதிய வழித்தடங்களான மவுண்ட் மெட்ரோ- தியாகராயநகர்(576), கவுல்பஜார் இந்திராநகர்-பல்லாவரம்(எஸ்40) ஆகிய வழித்தடங்கள்.மேலும் அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையத்தில் இருந்து பழைய வழித்தடங்களான அய்யப்பன்தாங்கல்-தாம்பரம்-4 பஸ்கள்(166), தண்டலம்-பிராட்வே(88 சி),குன்றத்தூர்-பிராட்வே(188 சி), குன்றத்தூர்-திருப்போரூர்-2 பஸ்கள்(566), புதிய சிற்றுந்து வழித்தடங்களான கோவூர் ஈ.பி.-பல்லாவரம்(எஸ்.165), போரூர்-மணிமேடு(எஸ்.166), மாநகர பஸ் வழித்தடமான குன்றத்தூர்-தியாகராயநகர்(188 ஏ)ஆகிய பழைய மற்றும் புதிய வழித்தடங்கள் என மொத்தம் 12 வழித்தடங்களில் 17 மாநகர பஸ்கள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்த பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.விழாவில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம், முன்னாள் கவுன்சிலர் என்.சந்திரன், தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
29 லட்சம் பெண்கள்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோரிக்கையை ஏற்று அய்யப்பன்தாங்கல் பஸ் நிலையம் நவீனமுறையில் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து கழகத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி கடன் உள்ளது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கினாலும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். நேற்று மட்டும் 29 லட்சம் பெண்கள் பயணம் செய்து இருக்கிறார்கள். இதன்மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சேமிப்பாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது ஆலந்தூரில் இருந்து பிராட்வே, தியாகராயநகர் ஆகிய பகுதிகளுக்கு மீண்டும் மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கோரிக்கை வைத்தார்.
Related Tags :
Next Story