ஆடி மாதம் முதல் நாளில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ஆடி மாதம் முதல் நாளில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 18 July 2021 11:44 AM GMT (Updated: 18 July 2021 11:44 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை துவங்கி 14 வாரங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இவர்கள் சனிக்கிழமை இரவு வந்து தங்கி ஞாயிற்றுக்கிழமை தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்புவர். 

இந்நிலையில், நேற்று ஆடி மாதம் சனிக்கிழமை என்பதால், சென்னை, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை, சிகப்பு ஆடை அணிந்து கையில் வேப்பிலை ஏந்திய வண்ணம் நடைபயணமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.நேற்று மாலை இப்பகுதியில் ஆங்காங்கே பெய்த பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றனர். இதனால் பெரியபாளையம் மேம்பாலம், பெரியபாளையம்-கன்னிகைப்பேர் சாலை, பெரியபாளையம்-தண்டலம் சாலை, பெரியபாளையம்-ஆரணி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் 
காணப்பட்டது.

Next Story