பள்ளிப்பட்டு வாரச்சந்தை மைதானம் மூடப்பட்டதால் தெருமுனையில் காய்கறி கடைகளை விரித்த விவசாயிகள்
பள்ளிப்பட்டு வாரச்சந்தை மைதானம் மூடப்பட்டதால் விவசாயிகள் தெருமுனையில் காய்கறி கடைகளை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.
வாரச்சந்தை மைதானம் மூடல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதற்காக பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் வாரச்சந்தை மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வாரச் சந்தையில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமல்லாது பள்ளிப்பட்டு ஒன்றியத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லாகுண்டா, கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி, நெலவாய், லட்சுமிபுரம், கார்வேட்டி நகரம், அன்னூர், பாலசமுத்திரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆந்திர
கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிப்பட்டு வாரச் சந்தை மைதானம் மூடப்பட்டது.
களை கட்டும் வியாபாரம்
இதனால் வாரச்சந்தையில் கடைகளை போட முடியாமல் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை எப்படி விற்பனை செய்வது என்று சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தெருமுனை காய்கறி கடைகளுக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, விவசாயிகள் சனிக்கிழமை தோறும் பள்ளிப்பட்டு பார்வதி உடனுறை சங்கமேஸ்வரர் கோவில் முன்பகுதியில் காய்கறி கடைகளை போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.
குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த தெருமுனை காய்கறி கடைகளில் தற்போது பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வியாபாரம் களை கட்டுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story