போடி அருகே பரபரப்பு தென்னை மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த முதியவர்


போடி அருகே பரபரப்பு தென்னை மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த முதியவர்
x
தினத்தந்தி 18 July 2021 7:33 PM IST (Updated: 18 July 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தென்னை மரத்தில் ஏறி விட்டு இறங்க முடியாமல் தவித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

போடி :
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று இவர், அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டார். தேங்காய் பறிப்பதற்காக சுமார் 50 அடி உயர தென்னை மரத்தில் அவர் ஏறினார். 
அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தென்னை மரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதுகுறித்து அவர் கீழே நின்றவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தென்னைமரத்தில் ஏறி பெருமாள் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவரை தென்னைமரத்தோடு சேர்த்து கயிறு மூலம் கட்டினார். 
பின்னர் இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், ராட்சத ஏணி மூலம் மரத்தில் ஏறினர். அதன்பிறகு பொதுமக்கள் உதவியுடன், கயிறு கட்டி பெருமாளை மரத்தில் இருந்து கீழே இறக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story