மூங்கில்துறைப்பட்டு அருகே பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகை பறிப்பு
மூங்கில்துறைப்பட்டு அருகே அழைப்பிதழ் கொடுப்பதுபோல் நடித்து பெண்ணை கட்டிப்போட்டு 14 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மூங்கில்துறைப்பட்டு
அழைப்பிதழ் கொடுக்க
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 75). இவர் அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பார்வதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், கதவை தட்டி அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். இதை உண்மை என்று நம்பிய பார்வதி, படுக்கையில் இருந்து எழுந்து கதவை திறந்தார்.
பெண்ணை கட்டிப்போட்டு...
இதையடுத்து 2 வாலிபர்களும் வீட்டிற்குள் புகுந்து, பார்வதியின் கை, கால்களை கட்டினர். அப்போது பார்வதி கூச்சலிட்டதால், அவரது வாயில் துணியை திணித்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட 14 பவுன் நகையை பறித்துவிட்டு சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
பார்வதியின் வாயில் துணி இருந்ததால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தார்.
போலீசார் விசாரணை
இதற்கிடையில் நேற்று காலை பார்வதியின் முனங்கல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உள்ளே சென்றனர். அங்கு பார்வதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கை, கால்களில் போடப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் விரைந்து வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story