கேள்விக்குறியான 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி
வாய்க்கால் தூர்வாரப்படாததால் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் மற்றும் திருமானூர் ஒன்றிய பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக உள்ளன. தா.பழூர் பகுதி டெல்டா பாசனத்திற்கு குருவாடி தலைப்பில் இருந்து பிரதான வாய்க்கால் பிரிந்து பல்வேறு கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இதில் முதலாம் எண் பாசன வாய்க்கால் காரைக்குறிச்சி ஊராட்சியின் அருள்மொழி மற்றும் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியின் அனைக்குடி பகுதிகளின் எல்லையில் பொன்னாற்றில் இருந்து பிரிகிறது.
இவ்வாறு தொடங்கும் அந்த வாய்க்கால் மதனத்தூர், வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலக்குடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிகாடு, அண்ணங்காரம்பேட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் பாசனம் பெறப்படுகிறது. முதலாம் எண் பாசன வாய்க்காலின் உதவியுடன் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
கரைகளில் உடைப்பு
தற்போது பொன்னாற்றின் தலைப்பான குருவாடி கிராமத்தில் இருந்து பிரதான வாய்க்கால் 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டது. இதைத்தொடர்ந்து பொன்னாற்றின் அனைத்து கிளை பாசன வாய்க்கால்களும் தூர்வாரப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் முதலாம் எண் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. பொன்னாறு வாய்க்கால் தூர்வாரப்பட்டு உள்ளதால், அது ஆழமான பகுதியாக மாறியுள்ளது. தூர்வாரப்படாத முதலாம் என் பாசன வாய்க்கால் மேட்டு பகுதியாக இருக்கிறது. இதனால் இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேராது.
ேமலும் தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படாததால் ஆங்காங்கே வாய்க்காலின் கரைகள் உடைந்து காணப்படுகிறது. விவசாயம் நடைபெறும்போது தண்ணீர் திறக்கப்படும் நிலையில், வாய்க்கால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் வடிகால் வாய்க்கால்கள் மூலம் மீண்டும் தண்ணீர் கொள்ளிடத்தில் சென்று கலந்துவிடும் சூழ்நிலை உள்ளது. இதனால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படாமல் வீணாகும்.
விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்
இந்நிலையில் முதலாம் எண் பாசன வாய்க்காலில் மேலக்குடிகாடு பகுதியில் மட்டும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் தூர்வரப்பட்டது. வாய்க்காலின் தலைப்பில் இருந்து முதல் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருந்து மீதமுள்ள 3 கிலோமீட்டர் தூரம் மட்டும் தூர்வாரப்பட்டதால் எள் அளவுகூட பயன் ஏற்படாது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஆடிப்பட்டம் நெல் விதைப்பதற்கு முன்பாக முதலாம் எண் பாசன வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story