கிடப்பில் போடப்பட்ட ரேஷன் கடை கட்டுமான பணிகள்
அரியலூரில் கிடப்பில் போடப்பட்ட ரேஷன் கடை கட்டுமான பணிகளை மீண்டும் தொடக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூரில் நகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 2 புதிய ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ஒரு கடைக்கான கட்டிடம் ஜெயங்கொண்டம் சாலையும், பிள்ளையார் கோவில் தெரு சாலையும் இணையும் இடத்திலும், மற்றொரு கடைக்கான கட்டிடம் காமராஜர் திடலிலும் கட்டுவதற்கான பணிகள் நடந்தன.
இதில் பிள்ளையார்கோவில் தெருவில் அஸ்திவாரங்கள் தோண்டப்பட்டு, காங்கிரீட் போடும் நிலையில் இருந்தபோது பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுபற்றி பொதுமக்கள் கேட்டபோது, அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் பெண்கள் ரேஷன் கடைக்கு வர பாதுகாப்பு இல்லை என்று கூறியதால், பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சாலை வழியாக டாஸ்மாக் கடையை தாண்டி தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் சென்று வருகின்றனர். வாரச்சந்தை நடைபெறும்போது இரவு 10 மணி வரையிலும் பெண்கள் வந்து செல்வார்கள்.
கட்டுமான பணி
மேலும் அந்த இடத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. எனவே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் முன்பு, அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டுமான பணியை உடனடியாக தொடங்க அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் காமராஜர் திடலில் ரேஷன்கடை கட்டினால், அந்த திடலில் பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் நடத்த முடியாது. எனவே அந்த திடலுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடைக்கான கட்டிடத்தை கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.
Related Tags :
Next Story