திருச்சியில் பரிதாபம்: துப்பட்டாவில் ஊஞ்சல் கட்டி ஆடிய 9 வயது சிறுமி கழுத்து இறுகி பலி
திருச்சியில் துப்பட்டாவில் ஊஞ்சல் கட்டி ஆடிய 9 வயது சிறுமி கழுத்து இறுகி பரிதாபமாக பலியானார்.
திருச்சி,
திருச்சியில் துப்பட்டாவில் ஊஞ்சல் கட்டி ஆடிய 9 வயது சிறுமி கழுத்து இறுகி பரிதாபமாக பலியானார்.
ஆன்-லைன் வகுப்புகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன் வகுப்பில் பாடம் படித்து வருகிறார்கள். ஆன்-லைன் வகுப்பு நடைபெறும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தெருக்களில் சிறுவர்கள் ஒன்றாக விளையாடி வருகிறார்கள்.
இதுபோன்ற நேரங்களில் எதிர்பாராதவிதமாக அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுமி வீட்டில் துப்பட்டாவை கட்டி ஊஞ்சல் ஆடியபோது, துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் தற்போது திருச்சியில் மேலும் ஒரு பரிதாப சம்பவம் அரங்கேறி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
ஊஞ்சல் ஆடிய சிறுமி
திருச்சி திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் சுந்தராஜ். இவர் திருச்சியில் பானை தயாரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் நித்யஸ்ரீ (வயது 9). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா காலம் என்பதால் சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் நித்யஸ்ரீ கடந்த 12-ந் தேதி வீட்டில் உள்ள ஒரு அறையில் துப்பட்டாவால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.
துப்பட்டா இறுக்கி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் துப்பட்டா இறுக்கியது. இதில் சிறுமி நித்யஸ்ரீ மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். நீண்டநேரமாக நித்யஸ்ரீ அறையை விட்டு வெளியே வராததால் அவருடைய தாய் ராஜலெட்சுமி அறையில் சென்று பார்த்தார். அங்கு அவரது மகள் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் நித்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கவனமாக பார்க்க வேண்டும்
துப்பட்டா கழுத்தில் இறுகி சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story