காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவூர்
புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் விராலிமலை தாலுகா குன்னத்தூரில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குன்னத்தூரில் கால்வாய் வெட்டும் பணிகளை காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். அப்போது சங்கத்தின் தலைவர் மாரிமுத்து கூறுகையில், இத்திட்டப்பணிகளை விரிவுபடுத்தி விரைவாக முடிக்கவும், காவிரி-வைகை-குண்டாறு பாசன வாய்க்கால் பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும்.
தற்போதைய நிலையில் இத்திட்டம் தொடக்க நிலையில் இருப்பதால் தமிழக அரசு புதிதாக தொடங்கியுள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பொறியாளர்கள் தலைமையில் குழு அமைத்து புதுக்கோட்டையில் தொடங்கி அனைத்து கண்மாய்களுக்கும் இந்த நீர் ஆதாரத்தை முறைப்படுத்த செயல்திட்டம் தயாரிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், இத்திட்டத்தை துரிதப்படுத்த முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம் என்றார். அப்போது மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் 7 மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story