தண்ணீர் பாட்டில் வாங்கிய பயணிக்கு ரசீது வழங்காத கடைக்காரரை கண்டித்த அதிகாரி
மதுரை ரெயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பயணிக்கு ரசீது வழங்காத கடைக்காரரை ஆய்வின்போது அதிகாரி கண்டித்தார்
மதுரை
மதுரை ரெயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிய பயணிக்கு ரசீது வழங்காத கடைக்காரரை ஆய்வின்போது அதிகாரி கண்டித்தார்.
திடீர் ஆய்வு
மதுரை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே வாரிய நிதி மேலாண்மை உறுப்பினர் நரேஷ் சலோச்சா, டெல்லியில் இருந்து வந்து திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பயணிகளுக்கான வசதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த கடைகளையும் கண்காணித்தார்.
அப்போது ரெயில்நிலையத்திற்குள் இருந்த ஒரு கடையில் பெண் பயணி ஒருவர், தண்ணீர் பாட்டில் வாங்கினார். ஆனால் அதற்கு உரிய ரசீதை கடைக்காரர் கொடுக்கவில்லை.
இதை கவனித்த அதிகாரி, உடனடியாக அங்கு சென்று கடையின் அருகில் உள்ள "ரசீது இல்லையென்றால் உணவு இலவசம்" என்ற விளம்பரத்தை கடைக்காரரிடம் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பெண் பயணி வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்கான தொகையை திருப்பி கொடுக்க செய்தார்.
ஏற்பாடு
அதன்பின்பு ரெயில்நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறைகள், உணவு நிலையங்கள், நடைமேடை, ரெயில் நிலைய பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
அவருடன் கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின், தெற்கு ரெயில்வே நிதி ஆலோசகர் ஆனந்த் ரூபண்காடி, இயக்குனர் டி.எல். கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story