சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்
குமரியில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்காவில் குடும்பம், குடும்பமாக கூடினர்.
நாகர்கோவில்:-
குமரியில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்காவில் குடும்பம், குடும்பமாக கூடினர்.
கொரோனா ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி உள்ளனர். இதனால், நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். நேற்று காலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக ஏராளமானோர் கடற்கரையில் குவிந்து இருந்தனர். ஆனால், மேக மூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை.
மேலும் மாலையில் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு கடற்கரையில் கூட்டமாக அமர்ந்து இளைப்பாறினர். கடலோர பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்காதவாறு கண்காணித்தனர்.பொதுமக்களின் வருகையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.
வேப்பமூடு பூங்கா
நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஊரடங்குக்கு பிறகு நேற்று தான் அதிகமான பொதுமக்கள் பூங்காவிற்கு வருகை தந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் குடும்பத்தோடு வந்தனர். பூங்காவில் சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் கூட்டம்
இதே போல பூங்காவில் திரண்ட ஏராளமான இளம்பெண்கள் தங்களது தோழிகளுடன் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதோடு புதுமணத் தம்பதியினரும் பூங்காவிற்கு வந்திருந்தனர். அதிலும் நேற்று வெயிலின் தாக்கம் இல்லாமல் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியதால் வெகுநேரம் வரை பொதுமக்கள் பூங்காவில் பொழுதை கழித்தனர். இதுபோல், மாத்தூர் தொட்டி பாலம், சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story