உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா உடல் தகனம்


உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடா உடல் தகனம்
x
தினத்தந்தி 19 July 2021 2:09 AM IST (Updated: 19 July 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. போலீஸ் மரியாதையுடன் நடந்தது.

மண்டியா:

மாதேகவுடா மரணம்

  கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா ஹனுமந்தநகரை சேர்ந்தவர் ஜி.மாதேகவுடா. இவருக்கு வயது 94. மண்டியா தொகுதி முன்னாள் எம்.பி.யான இவர், காவிரி போராட்ட குழு தலைவராக இருந்தாா். காவிரி நதிநீர் உள்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி உள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குண்டுராவின் மந்திரிசபையில் வனத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

  இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக மாதேகவுடா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் கே.எம்.தொட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அஸ்வத் நாராயண், சித்தராமையா

  காவிரி போராட்ட குழு தலைவர் மாதேகவுடாவின் இறுதிச்சடங்கு நேற்று அவருடைய சொந்த ஊரான ஹனுமந்தநகரில் நடந்தது. அங்குள்ள மாதேகவுடாவின் வீட்டில் அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

  துணை முதல்-மந்திரி அஸ்வத்நாராயண், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி நாராயணகவுடா, முன்னாள் மந்திரி செலுவராயசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், போராட்ட குழு தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோா் மாதேகவுடாவின் வீட்டுக்கு வந்து அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

  மாதேகவுடாவின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸ் மரியாதையுடன் மாதேகவுடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு மாதேகவுடாவின் மகன் டாக்டர் பிரகாஷ் தீ மூட்டினார்.

Next Story