கர்நாடகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம் - 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்


கர்நாடகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம் - 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 19 July 2021 2:29 AM IST (Updated: 19 July 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

பெங்களூரு:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் பாடங்களை 2 ஆக சுருக்கி விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் முறைப்படி 2 தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இந்த தேர்வுகள் ஜூலை மாதம் 19-ந் தேதி மற்றும் 22-ந் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில் கொரோனா பீதிக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்களின் வசதிக்காக 4,885 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 73 ஆயிரத்து 64 ஆயிரம் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு அறைகளில் ஒரு அறையில் அதிகபட்சமாக 12 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு முகக்கவசம்

  இதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 643 மாணவர்களும், 4 லட்சத்து 3 ஆயிரத்து 938 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள். முதல் நாளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களை உள்ளடக்கிய பாட தேர்வு நடக்கிறது. வருகிற 22-ந் தேதி கன்னடம், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை உள்ளடக்கிய மொழி பாட தேர்வு நடக்கிறது.

  மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்து 927 பள்ளிகளில் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் மூலம் அவர்களின் உடல் வெப்பத்தை சோதித்தல், சானிடைசர் திரவத்தை வழங்குதல் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு தேர்வு அறைகள் சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

தனிமனித இடைவெளி

  இந்த தேர்வு பணியில் 1 லட்சத்து 19 ஆயரத்து 460 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வு மையங்களில் கட்டாயம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ஆசிரியர்கள் முகக்கவசத்துடன் முகத்தை முழுமையாக மூடும் கண்ணாடி கவத்தையும் அணிய வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  ஒரு தாலுகாவிற்கு ஒரு அவசர சிகிச்சை வாகனத்தை தயார் நிலையில் நிறுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏதாவது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த வாகனத்திற்கு தகவல் தெரிவித்து தேர்வு மையத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு

  ஒரு தாலுகாவிற்கு ஒரு கொரோனா தேர்வு மையம் அமைக்கப்பட்டு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதித்து தேர்வு எழுத கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கொரோனா தேர்வு மையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் தேர்வு மையங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள்

  மேலும் விடைத்தாள்களை பாதுகாப்பாக மாவட்ட தலைநகரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்வு மையங்களின் அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (இன்று) தொடங்குகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மாணவர்கள் சற்று முன்னதாகவே பள்ளிக்கு வரக்கூடிய சூழல் உள்ளது. அவ்வாறு வரும் மாணவர்களை தேர்வு அறைக்குள் அமர அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

அறிக்கை வழங்கும்

  கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு எண்.95 முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காநாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு சாதக-பாதகங்களை ஆராய்ந்து இந்த மாத இறுதியில் அறிக்கையை வழங்கும். அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

  கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் இதை விட அதிகமாக இருந்தது. அப்போது அனைத்து பாடங்களுக்கும் வெற்றிகரமாக தேர்வு நடத்தினோம். அந்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட தற்போது அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மேலும் பாடங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைத்துள்ளோம். அதனால் மாணவர்கள் அச்சமின்றி வந்து தேர்வு எழுத வேண்டும்.
  இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

 கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு அனுமதி

இருமல், சளி, காய்ச்சலால் அவதிப்படும் மாணவர்களை தனியாக அமர்த்தி தேர்வு எழுத வசதியாக ஒவ்வொரு மையத்திலும் 2 அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் அறிகுறி உள்ள மாணவர்கள் இந்த அறையில் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எண்.95 முகக்கவசத்தை அரசே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story