ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்-4 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்-4 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2021 3:14 AM IST (Updated: 19 July 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.40 லட்சம் கஞ்சா மற்றும் வேன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.40 லட்சம் கஞ்சா மற்றும் வேன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை காரிப்பட்டி அருகே ராமலிங்கபுரம் பிரிவு சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் வேனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து கார் மற்றும் வேனில் போலீசார் சோதனை செய்தனர்.
கஞ்சா கடத்தல்
அப்போது அவற்றில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45), மதுரையை சேர்ந்த ஆண்டிச்சாமி (47), தனபாக்கியம் (62), அழகேசன் (40) என்பது தெரியவந்தது.
மேலும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி சேலத்துக்கு கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். அதை சேலம், மதுரை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர்.
கார், வேன் பறிமுதல்
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கார், வேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரும் எந்தெந்த மாவட்டங்களில் யார்? யாருக்கு கஞ்சா விற்பனை செய்து உள்ளார்கள்? என்றும், இதில் யார்? யார்? சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, கைது செய்யப்பட்டு உள்ள 4 பேரும் கஞ்சா கடத்துவதையே தொழிலாக செய்து வந்துள்ளனர். எனவே கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் இன்னும் பலர் சிக்குவார்கள். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறினர்.

Next Story