சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி கடலில் இறங்கி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் போராட்டம்
சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி,
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சுருக்குடி மற்றும் இரட்ைடமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடற்பகுதியில் மீன் வளம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தமிழக அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டு ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வலையில் சுருக்குடி வலைக்கு தடை விதித்தது. இதற்கு மீனவர்களில் ஒரு பகுதியினர் ஆதரவும் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல், மடவாமேடு, கொட்டாயமேடு, பழையாறு, கொடியாம்பாளையம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கடற்கரையில் மீனவர்கள் குடும்பத்தோடு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும்மீனவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றொரு தரப்பினர் கலந்து கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
நேற்று 2-வது நாளாக திருமுல்லைவாசல் கிராமத்தில் உள்ள மீனவர்கள் மீனவர் தலைவர் காளிதாஸ் தலைமையில் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் காரணமாக மீனவர்களின் 30 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் திடீரென எழுந்து அருகிலிருந்த கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் பொன்னிவளவன், தலைமையிலான ஏராளமான போலீசார் கடலில் இறங்க முயன்ற மீனவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் இதை பொருட்படுத்தாத மீனவர்கள் கடலில் இறங்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 30 நிமிடம் கழித்து மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை கார் மற்றும் வேன்கள் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதைப்போல கொள்ளிடம் அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமத்திலும் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி மனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்போல பொறையாறு அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் அருகே பழையார், கொடியம்பாளையம், மடவாமேடு, சின்னொட்டாய் மேடு, ஓலைகொட்டாய்மேடு, கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படகுகள் 250 பைபர் படகுகள் 200 நாட்டுப் படகுகள் உள்ளன. மீன்பிடி தொழிலை நம்பி இங்கு 6 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். பழையார் துறைமுகத்தில் இருந்து நேற்று ஒரு சில மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பிற மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவித்து மீன்பிடிக்க செல்லவில்லை.
சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவித்து மடவாமேடு மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நேற்று மீனவ கிராம பெண்கள் மடவாமேடு கடற்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மடவாமேடு கடல்பகுதியில் மீனவ பெண்கள் கடலில் இறங்கி சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக கடலோர கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து மடவாமேடு கிராம தலைவர் கலியமூர்த்தி கூறியதாவது:-
மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு சுருக்கு மடி வலையை கடலில் மீன்பிடிக்கபயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த வேண்டும். தற்போது சுருக்கு மடி வலை தடை செய்யப்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவர்களின் நலனின் அக்கறை கொண்டு மத்திய- மாநில அரசுகள் உடனடியாக சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க ேவண்டும். தவறும் பட்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story