வைகை ஆற்றில் தண்ணீர் திருடும் மோட்டார்களின் மின் இணைப்பு துண்டிப்பு அதிகாரிகள் முடிவு
வைகை ஆற்றில் தண்ணீர் திருடும் மோட்டார்களின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 68.50 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் வைகை அணைக்கு தண்ணீர் வரும் வைகை ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கானோர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை திருடி வருகின்றனர். இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.
இதையடுத்து தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் குன்னூர் வைகை ஆற்றங்கரையோரம் ஆய்வு நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடுபவர்களின் விவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மோட்டார்களுக்கான மின்சார இணைப்பை துண்டிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே அதிகாரிகள் சோதனை செய்ய வருவதை அறிந்த ஒருசிலர் அவர்கள் வருவதற்கு முன்னதாக மின்மோட்டாரை அப்புறப்படுத்தி சென்றிருந்தனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story