தேனி மாவட்டத்தில் 14859 மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி 540 பேர் 551க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்


தேனி மாவட்டத்தில் 14859 மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி 540 பேர் 551க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்
x
தினத்தந்தி 19 July 2021 6:49 PM IST (Updated: 19 July 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பில் 14 ஆயிரத்து 859 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 540 பேர் 551 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.

தேனி :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவ, மாணவிகள் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி நடந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் 139 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 511 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 859 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மதிப்பெண் விவரம்
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம் 600 மதிப்பெண்கள் ஆகும். இதில், 551 மதிப்பெண்களுக்கு மேல் 167 மாணவர்கள், 373 மாணவிகள் என மொத்தம் 540 பேர் எடுத்துள்ளனர். 501-ல் இருந்து 550 மதிப்பெண் வரை 2 ஆயிரத்து 545 மாணவ, மாணவிகளும், 451-ல் இருந்து 500 மதிப்பெண் வரை 3 ஆயிரத்து 733 மாணவ, மாணவிகளும் எடுத்துள்ளனர். 400-ல் இருந்து 450 மதிப்பெண் வரை 3 ஆயிரத்து 994 பேரும் எடுத்துள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு குறைவாக 4 ஆயிரத்து 47 பேர் பெற்றுள்ளனர்.
இந்த மதிப்பெண் பட்டியல் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், வீட்டில் இருந்தபடியே மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொண்டனர். மேலும் இணையதளம் வாயிலாகவும் இந்த விவரங்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



Next Story