பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 19 July 2021 9:37 PM IST (Updated: 19 July 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

திண்டுக்கல்: 


தேர்வு ரத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 86 அரசு பள்ளிகளும், 50 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 76 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். 

இந்த பள்ளிகளில் மாணவர்கள் 9 ஆயிரத்து 934 பேர், மாணவிகள் 11 ஆயிரத்து 188 பேர் என மொத்தம் 21 ஆயிரத்து 122 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அரசு அறிவிக்குமா? அப்படி அறிவித்தால் மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்ற குழப்பத்தில் மாணவ-மாணவிகள் இருந்தனர். 

இதற்கிடையே பிளஸ்-2 மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது.

100 சதவீத தேர்ச்சி
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அரசு அறிவித்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 122 பேரும் தேர்ச்சி பெற்றனர். 

தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் சில மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று தாங்கள் பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.


தேர்வு எழுதாமல் ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பிளஸ்-2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் கல்லூரியில் நாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு கிடைக்குமா? என்ற குழப்பம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story