பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை தம்பி கைது


பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை தம்பி கைது
x
தினத்தந்தி 19 July 2021 10:17 PM IST (Updated: 19 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயிகள்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 55), அம்மாசி (52). விவசாயிகள். அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு பொது வழிப்பாதை தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்தது. 
இந்தநிலையில் நேற்று காலை அம்மாசி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா, தம்பி அம்மாசியிடம் நிலப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அம்மாசி அண்ணன் ராஜாவின் தலையில் மண்வெட்டியால் அடித்துள்ளார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தம்பி கைது
இதையடுத்து அம்மாசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த கொலை சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அம்மாசியை கைது செய்தனர். நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story