டாக்டர்கள், செவிலியர்கள் 354 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
நீலகிரியில் பழங்குடியினர்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு வழங்கிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 354 பேருக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
ஊட்டி
நீலகிரியில் பழங்குடியினர்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு வழங்கிய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 354 பேருக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
முதல் மாவட்டம்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த பழங்குடியினர்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக விளங்க செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுப்புற சூழல், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தனர்.
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கி டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 354 பேருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராட்டு
நீலகிரியில் 18 வயதுக்கு மேல் தகுதி உடைய பழங்குடியின மக்கள் 21 ஆயிரத்து 151 பேர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் 38 ஆயிரத்து 658 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டரை நேரில் அழைத்து முதல்-அமைச்சர் பாராட்டினார்.
டாக்டர்களுக்கு நன்றி
இந்த இலக்கினை அடைய தன்னலம் கருதாமல் முழு ஈடுபாட்டுடன் தங்களை ஈடுபடுத்திய சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை போன்ற பல்துறை துறைகளை சேர்ந்த அலுவலர்கள், முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் நிர்ணயித்த இலக்கை அடைய முடிந்தது. டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story