எல்க்ஹில் சாலையில் மண்சரிவு
ஊட்டியில் தொடர் மழையால் எல்க்ஹில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டியில் தொடர் மழையால் எல்க்ஹில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது.
மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
மண்சரிவு
இந்த நிலையில் நேற்று ஊட்டி பாம்பேகேசில் பகுதியில் இருந்து எல்க்ஹில் செல்லும் சாலையில் விவசாய தோட்டத்தில் இருந்து மண் சரிந்து விழுந்தது. பாதி சாலையில் மண் விழுந்து கிடப்பதால், குறுகிய வளைவில் மேல் நோக்கி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, மண் சரிவை அகற்றி வாகனங்கள் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-22.4, நடுவட்டம்-35.5, கல்லட்டி-24, கிளன்மார்கன்-48, அவலாஞ்சி-23, அப்பர்பவானி-14, கூடலூர்-19, தேவாலா-23, செருமுள்ளி-15, பாடாந்தொரை-14, ஓவேலி-16, பந்தலூர்-39, சேரங்கோடு-24 உள்பட மொத்தம் 403.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதேபோன்று பந்தலூர் தாலுகா பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதால், மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story