கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 July 2021 11:12 PM IST (Updated: 19 July 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கருணைகொலை செய்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

முற்றுகை

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் க.செல்லம்பட்டு, எடுத்தவாய்நத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் மனுவுடன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எங்களை கருணை கொலை செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். 
அவர்கள் வைத்திருந்த மனுவில், நாங்கள் அன்றாடம் பிழைப்பதற்கு வழியில்லாமல் வறுமையில் இருக்கிறோம். இதனால் உடல் அளவிலும், மன அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஒவ்வொரு நாளும் பசியும், பட்டினியுமாக சிரமப்பட்டு வருகிறோம். எனவே இதற்கு மேல் எங்களால் உலகில் வாழ முடியாது என்பதால் அரசு சட்டத்தின் கீழ் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக கொடுக்கவோ அல்லது புகார் பெட்டியிலோ போடவேண்டும். உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 
கருணை கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கக் கோரி பெண்கள் முற்றுகையிட்டதால் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story