மயிலாடுதுறை மாவட்டத்தில், 3-வது நாளாக மீனவர்கள் போராட்டம்


மயிலாடுதுறை மாவட்டத்தில், 3-வது நாளாக மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2021 11:13 PM IST (Updated: 19 July 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

திருவெண்காடு:
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
3-வது நாளாக போராட்டம்
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல், மடவாமேடு, கொட்டாயமேடு, பழையாறு, கொடியம்பாளையம் உள்பட 23 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
சீர்காழி
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3-வது நாளாக தங்களது குடும்பத்தினருடன் மீனவர் சங்க தலைவர் காளிதாஸ் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்று முன்தினம் இரவு சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விடிய, விடிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
சாலைமறியல்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சீர்காழி தாசில்தார் சண்முகத்திடம் ஒப்படைப்பதற்காக உண்ணாவிரத போராட்ட களத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சீர்காழி நோக்கி வந்தனர்.
காந்தி நகர் அருகில் வந்தவர்களை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் சீர்காழி திருமுல்லைவாசல் சாலை காந்தி நகர் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்
சாலை மறியலை கைவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்கு செவிசாய்க்காத மீனவர்கள் தொடர்ந்து 3 மணி நேரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மொத்தமாக ஒப்படைத்துவிட்டு மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 
தடையை மீறுவோம்...
சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கவில்லை என்றால் இன்று(செவ்வாய்க்கிழமை) தடையை மீறி சுருக்குமடி வலையோடு கடலுக்குச் சென்று மீன்பிடிக்க உள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று தடையை மீறி சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து மடவாமேடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு 3 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்ணகி சிலையின் முன்பு...
இதேபோல் பூம்புகார் மீனவ கிராமத்தில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்ட பந்தலில் இருந்து மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கண்ணகி சிலையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 
சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவின் நகலை சுற்றுலா வளாகத்தில் உள்ள கண்ணகி சிலையின் முன்பு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஊர்வலமாக சென்றனர்
அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் கண்ணகி சிலையை பார்த்து கண்ணகி தாயே... எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மனமுருகி வேண்டி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து மீண்டும் போராட்ட பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். 
இதனைத்தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் திரளானவர்கள் அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தங்களது கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். 
அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்
இந்த நிலையில் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லா மேக், தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சமரசத்தை ஏற்க மறுத்த மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனை தொடர்ந்து மீனவர்கள் அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீண்டும் ஊர்வலமாக சென்று போராட்ட பந்தலில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
போலீசார் குவிப்பு
கடந்த மூன்று நாட்களாக மீனவர்களின் தொடர் போராட்டத்தால் பழையாறு முதல் சந்திரபாடி வரை உள்ள 23 மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
மேற்கண்ட கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் கிராமங்கள் தோறும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
5 கிலோ மீட்டர் பேரணி
பொறையாறு அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கக்கோரி கடந்த 17-ந்தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று  3-வது நாளான நேற்று ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை தரங்கம்பாடி தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. 
முன்னதாக, சந்திரபாடி கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள்  குடும்பத்துடன்  5 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மீனவர்களை தாசில்தார் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் சாலையில் அமர்ந்து மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வாக்குவாதம்
இதை தொடர்ந்து மயிலாடுதுறை  துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் பொறையாறு போலீசார் மற்றும் தரங்கம்பாடி தாசில்தார் ஹரிதரன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 650 ரேஷன் கார்டு மற்றும் 2,500 ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சந்திரபாடி பஞ்சாயத்தார்கள் தரங்கம்பாடி தாசில்தாரிடம்் ஒப்படைக்க சென்ற போது அவர்  வாங்க மறுத்ததால் மீனவர்களுக்கும் தாசில்தார் மற்றும் போலீசாருக்கும் இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
பின்னர் ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தாசில்தாரிடம் மீனவ பஞ்சாயத்தார் ஒப்படைத்தனர்.தங்கள் வாழ்வாதாரமான சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவர் கிராமத்தில் பழையாறு கொட்டாய்மேடு, தற்காஸ், புதுப்பட்டினம், மடவாமேடுஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்  நேற்று 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து பழையாறு கிராமத்திலிருந்து திருமுல்லைவாசல் செல்லும் கடற்கரையோர சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Next Story