சுல்தான்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய தம்பதி கைது
சுல்தான்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகை மீட்கப்பட்டது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகை மீட்கப்பட்டது.
வீடு புகுந்து திருட்டு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 45). இவர் அந்தப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பரமேஸ்வரி தனது மகளுடன் வேலை செய்து இருந்தார்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ.22 ஆயிரம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் மர்ம ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், குப்புராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.
தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் செலக்கரிசல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
தம்பதி கைது
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
அதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமு என்கிற வீர ஆஞ்சநேயா (44), அவருடைய மனைவி இந்திராணி (40) என்பதும், தம்பதிகளான 2 பேரும் பரமேஸ்வரி வீட்டில் புகுந்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
19 பவுன் நகை மீட்பு
அவர்களிடம் இருந்து 19 பவுன் நகை ரூ.52 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ராமுவும், அவருடைய மனைவியும் இணைந்து திருடி வந்துள்ளனர்.
பல இடங்களில் இவர்கள் மீது வழக்கு உள்ளது. பகல் நேரத்தில் இந்திராணி ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்வதுபோன்று சென்று வீடுகளை நோட்டம் பார்த்துவிட்டு, இரவில் 2 பேரும் சேர்ந்து திருடி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story