மன்னார்குடி அருகே பரபரப்பு: பெயிண்டரை அடித்துக்கொன்று கிணற்றில் உடல் வீச்சு மனைவி-மாமனாரிடம் போலீசார் விசாரணை
மன்னார்குடி அருகே பெயிண்டரை அடித்துக்கொன்று அவருடைய உடல் கிணற்றில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவருடைய மனைவி மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி:-
மன்னார்குடி அருகே பெயிண்டரை அடித்துக்கொன்று அவருடைய உடல் கிணற்றில் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவருடைய மனைவி மற்றும் மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெயிண்டர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது45). பெயிண்டர். இவருடைய மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாண்டியனை கடந்த 2 நாட்களாக காணவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பாண்டியன் அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. போர்வையில் சுருட்டப்பட்டிருந்த அவருடைய உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்து இருந்தது.
மதுபோதையில் தகராறு
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரவாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாண்டியன் அடித்துக்கொலை செய்யப்பட்டதும், அவருடைய உடல் கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. பாண்டியனின் உடலை மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் பாண்டியன் மதுபோதையில் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனின் மனைவி மகேஸ்வரி மற்றும் மாமனார் கோவிந்தராஜ் (70) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story