கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்-கலெக்டர் அறிவுரை
கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்பதாகவும், இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கலெக்டருக்கு புகார்கள் சென்றன.
அதைத் தொடர்ந்து நேற்று காலை தொழிலாளர்கள் கூட்டமாக நிற்பதை தவிர்பதற்காக ரவுண்டானா அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் நிற்பதற்கு வட்டங்கள் வரையப்பட்டு அங்கு தொழிலாளர்கள் நிற்க வைக்கப்பட்டனர்.
இதனை கலெக்டர் முருகேஷ் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தி கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
கொரோனா 3-வது அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு நீங்கள் வேலைக்காக வெளியே சென்று வந்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசத்தை பெயரளவில் பயன்படுத்தக்கூடாது. முறையாக அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகக்கவசம் வழங்கிய கலெக்டர்
பின்னர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் நல வாரியத்தால் அடையாள அட்டை பெற்றவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனரா? என்று கண்டறிந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரவுண்டானா போக்குவரத்து சிக்னல் அருகில் முகக்கவசம் அணிவது தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து முகக்கவசங்களை அணிந்து செல்லமாறு அறிவுறுத்தினார். சிலருக்கு முகக்கவசத்தையும் வழங்கினார்.
அதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம், திருவண்ணாமலையில் உள்ள அனைத்து வணிக கடைகளிலும் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி போடாத கடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கை செய்யும் படியும், தொடர்ந்து அவர்கள் போடவில்லை என்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, நகராட்சி ஆணையர் சந்திரா மற்றும் நகராட்சி, தொழிலாளர் நலத்துறை, போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story