ஜவுளி நிறுவனத்துக்கு பூட்டு
சிங்கம்புணரியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், கிருமிநாசினிக்கு பதில் பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்த ஜவுளி நிறுவனத்தை ஒரு நாள் பூட்டுவதற்கு உத்தரவிட்டார்.
சிங்கம்புணரி,ஜூலை.
சிங்கம்புணரியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், கிருமிநாசினிக்கு பதில் பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்த ஜவுளி நிறுவனத்தை ஒரு நாள் பூட்டுவதற்கு உத்தரவிட்டார்.
விழிப்புணர்வு பிரசாரம்
கொரோனா பரவலை தடுக்க ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரியில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராணி முன்னிலையில் அதிகாரிகள் சிங்கம்புணரி பஸ் நிலையம் மற்றும் பெரியகடைவீதி, திண்டுக்கல் காரைக்குடி சாலை, பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். சாலைகளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியச் செய்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வு
சிங்கம்புணரி திண்டுக்கல், காரைக்குடி சாலையில் உள்ள வணிக வளாக பகுதியில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என தாசில்தார் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது ஒரு கடையில் இருந்த கிருமிநாசினி பாட்டிலில் கிருமிநாசினிக்கு பதிலாக சிறிதளவு தண்ணீர் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ரூ.1000 அபராதம் விதித்த தாசில்தார் அந்த நிறுவனத்தை ஒரு நாள் மட்டும் பூட்டுவதற்கு உத்தரவிட்டார்.
எச்சரிக்கை
இதுகுறித்து தாசில்தார் திருநாவுக்கரசு கூறுகையில், கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் குழந்தைகளை கடைவீதி பகுதிகளுக்கு அழைத்து வர அனுமதிக்கக்கூடாது. மேலும் வணிக நிறுவனங்களான ஜவுளி கடைகள், நகைக் கடைகள், மளிகை கடைகள் போன்ற கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது. கடையில் உள்ள அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு அம்சங்களான கிருமிநாசினி மற்றும் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி போன்றவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த் துறையினர், காவல் துறையினர், அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story