மாவட்டங்களில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி


மாவட்டங்களில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 July 2021 1:14 AM IST (Updated: 20 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்:

கணக்கிடப்பட்ட மதிப்பெண்
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் விவரம் இணையதள முகவாிகளில் வெளியிடப்பட்டது. சரியாக காலை 11 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 74 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 904 மாணவர்களும், 4 ஆயிரத்து 29 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 933 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 82 பள்ளிகளை சேர்ந்த 4,029 மாணவர்களும், 4,629 மாணவிகளும் என மொத்தம் 8,708 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும்.
செல்போன் மூலம் அறிந்து கொண்டனர்
மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள், அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகளின் பெயர், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள், தேர்ச்சி என்ற விவரம் அனுப்பப்பட்டது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் வீடுகள் அல்லது இருந்த இடத்திலேயே இருந்து செல்போன் மூலம் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கான இணையதள முகவரிகளில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

Next Story