ஆதார் மையத்தில் ஆன்லைன் டோக்கன் முறை அமலுக்கு வந்தது


ஆதார் மையத்தில் ஆன்லைன் டோக்கன் முறை அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 20 July 2021 2:48 AM IST (Updated: 20 July 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையத்தில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் வசதி அமலுக்கு வந்தது. ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்ட தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையத்தில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் வசதி அமலுக்கு வந்தது. ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆதார் பதிவு
குமரி மாவட்டத்தில் ஆதார் மையங்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று ஒவ்வொரு நாளும் டோக்கன் பெற்று ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் முறை அமலில் இருந்தது. இதில் ஒரு மையத்தில் அதிகபட்சமாக 25 முதல் 35 பேர் வரை மட்டுமே  பதிவுகளை மேற்கொள்ள முடிந்தது. ஆனால், பொதுமக்கள் அதிகாலையிலேயே ஆதார் பதிவுக்காக காத்திருப்பதும், டோக்கன் கிடைக்காத நிலையில் பிரச்சினைகள் ஏற்படுவதும் தொடர் கதையாக இருந்தது. 
எனவே, பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் நடைமுறையை மாவட்டம் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த ஆன்லைன் டோக்கன் பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தாலுகா அலுவலகங்கள்
அதாவது www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் "ஆதார் திருத்தம்-முன்பதிவு" (Aadhar Correction Online appointment) என்ற இணைப்பில் சென்று தங்களது டோக்கனை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் டோக்கனில் சம்பந்தப்பட்ட நபர் ஆதார் பதிவு செய்வதற்கான நாள், நேரம் மற்றும் பதிவு செய்ய வேண்டிய இடம் போன்ற விவரங்கள் இடம் பெற்று இருந்தது. ஒரு செல்போன் எண்ணுக்கு ஒரு டோக்கன் என்ற விதத்தில் டோக்கன் அனுமதிக்கப்பட்டது.
இந்த ஆன்லைன் டோக்கன் வசதி அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு, தோவாளை ஆகிய தாலுகா அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டது. கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம் போன்ற இடங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் நேரடி டோக்கன் முறையே அமலில் இருந்தது.
பொதுமக்கள் ஏமாற்றம்
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள இ-சேவை மையத்தில் ஆதார் பதிவுக்கு நேற்று ஆன்லைன் மூலம் பொதுமக்கள் டோக்கன் பெற்றனர். ஆன்லைன் முகவரியானது அலுவலக சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் இளைஞர்களும், படிப்பறிவு உள்ளவர்களும் செல்போனை பயன்படுத்தி சுலபமாக டோக்கன் பதிவு செய்தனர். 
ஆனால் இ-சேவை மையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் ஆவர். அவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை. மேலும் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தவும் தெரியவில்லை. இவர்கள் ஆன்லைன் மூலம் டோக்கன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. 
இதைதொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதாா் மையத்துக்கு சென்றனர். அங்கும் நாள் ஒன்றுக்கு 35 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டதால் பெரும்பாலான மக்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை. இதனால் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஆதார் பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story