தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது; 31 பவுன் நகை மீட்பு


தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது; 31 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 19 July 2021 9:26 PM GMT (Updated: 19 July 2021 9:26 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்து, அவரிடம் இருந்து 31 பவுன் நகையை தனிப்படை போலீசார் மீட்டனர்.

அரியலூர்:

தொடர் சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டுகளில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதன் (அரியலூர்), கலை கதிரவன் (ஜெயங்கொண்டம்) ஆகியோரின் மேற்பார்வையில், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது ஆண்டிமடம் தாலுகா இடையக்குறிச்சியை சேர்ந்த செந்தில்வேல் மகன் புரட்சி தமிழன் என்பது தெரியவந்தது.
நகைகள் மீட்பு
இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாகி இருந்த புரட்சி தமிழனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புரட்சி தமிழன் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, விக்கிரமங்கலம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் 11 வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து புரட்சி தமிழனிடம் இருந்து 31 பவுன் நகையையும், 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் மீட்டனர்.
பாராட்டு
துரிதமாக செயல்பட்டு, தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை பிடித்து, நகையை மீட்ட தனிப்படை போலீசாருக்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா தனிப்படை போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், புரட்சிதமிழன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.

Next Story