சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வாலிபர், மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வாலிபர், மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2021 4:04 AM IST (Updated: 20 July 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வாலிபர் மற்றும் மூதாட்டி ஆகியோர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வாலிபர் மற்றும் மூதாட்டி ஆகியோர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது அவர்களுடன் வந்த நவீன் (வயது 29) என்ற வாலிபர் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றினார்.
இதை பார்த்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் நவீன் மற்றும் பொதுமக்கள் கூறும் போது, வெள்ளக்கல்பட்டியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசித்து வந்தோம். அந்த இடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகத்தினர் காலி செய்ய வைத்தனர்.
மூதாட்டி
அப்போது அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.
இதேபோல் சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் முதல் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம்மாள் (70). நேற்று அவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்துடன் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது போலீசாரிடம் மண்எண்ணெய் பாட்டில் சிக்கியது.
சாப்பாடு கொடுப்பதில்லை
போலீசாரிடம் ஸ்ரீரங்கம்மாள் கூறும் போது, தனக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்தநிலையில் வீடு, நிலத்தை வாங்கி கொண்ட அவர்கள் தற்போது எனக்கு சாப்பாடு கொடுப்பதில்லை. இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறேன். 
எனவே அவர்களிடம் இருந்து வீடு, நிலத்தை மீட்டு தரவேண்டும் என்றார். இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்தார்.


Next Story