வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் ஏமாற்றிய ரூ.2 லட்சம் மீட்பு


வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் ஏமாற்றிய ரூ.2 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 20 July 2021 7:49 AM IST (Updated: 20 July 2021 8:01 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் ஏமாற்றிய ரூ.2 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

வேலூர்,

வேலூர் ஓட்டேரியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 26). இவர் கடந்த மாதம் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் குறைந்த விலைக்கு மெமரிகார்டுகள் தருவதாக குறிப்பிட்டிருந்தனர். அதைப்பார்த்த யோகேஷ், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபரை தொடர்பு கொண்டு தனக்கு மெமரிகார்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று தெரிவித்தார். தன்னிடம் ரூ.2 லட்சம் இல்லை என்று யோகேஷ் கூறவே, ரூ.1 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். அதை நம்பிய யோகேஷ் ரூ.1 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தி உள்ளார். 

பணம் கொடுத்தபின்னரும் அந்த நபர் மெமரிகார்டுகளை கொடுக்கவில்லை.
இதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த யோகேஷ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் துரித நடவடிக்கையால் வங்கியில் செலுத்திய ரூ.1 லட்சம் பணத்தை அந்த மர்மநபர் எடுக்கமுடியாமல் பணமும், வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது. அந்த பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்த ஜிலானிஅன்சாத் (42) என்ற வெங்காய வியாபாரிக்கு முகநூலில் மர்மநபர் ஒருவர் அறிமுகமானார். குறைந்த விலைக்கு வெங்காயம் தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார். அதை நம்பிய ஜிலானிஅன்சாத் வெவ்வேறு வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்.

பல நாட்களாகியும் கொடுத்த பணத்திற்கு வெங்காயம் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜிலானிஅன்சாத் வேலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1 லட்சத்தை மீட்டனர். மீதம் உள்ள தொகையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே முன்பின் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தங்களது வங்கி சார்ந்த விவரங்களை பகிர வேண்டாம். மர்மநபர்களால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story